ஏழு தமிழ் கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் அரசியல் விளையாட்டை நிறுத்துங்கள்!
ஐக்கிய நாடுகள் மன்றம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய மனித உரிமை குழுக்கள் என அனைத்தும் ஒரே ஒருமித்த குரலில், கொரோனா பரவலின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் சிறைகளில் இருந்து கைதிகளையும் பணியாளர்களையும் விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. ஆயினும்கூட, மாநில அரசுகளும் இந்திய ஒன்றிய அரசாங்கமும் மனிதாபிமானக் கருத்துக்களைப் புறந்தள்ளி, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தவிர்த்து, ஏழ்வரின் கவலைகளை கண்டுக்கொள்ளாது, அவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றன. ராஜீவ் காந்தி வழக்கில் ஏழு தமிழரை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய குடியரசுத் தலைவர் ஆர். என். கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
எழுவர் விடுதலையில் தமிழக முதல்வரின் நடவடிக்கை குறித்து தி வேர்ல்டு சிக் நியூஸின் ஆசிரியர் திரு. ஜக்மோகன் சிங், முதல்வருக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார்.
எழுவர் விடுதலையில் தமிழக முதல்வர் திரு. ஸ்டாலினின் நோக்கங்கள் உண்மையானதாக இருக்கலாம், ஆனால் அவரது வழிமுறை கடந்தகாலத்தைப்போல மிகுந்த கேள்விக்குறியாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
என் அன்பிற்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்!!
சமகால வரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தில் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை கடவுள் உங்களுக்கு வழங்கியுள்ளார். பெருகிவரும் கொரோனா பெருந்தொற்று தாக்குதலை நாம் எதிர்கொள்ளும் அதே வேளையில், அரசாங்கங்கள் தக்க நிவாரணம் வழங்குவதில் எப்படி மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனவோ, பிற பொது விடயங்களிலும் அவ்வாறே செயல்படுகின்றன. உங்கள் அரசாங்கம் முழு ஊரடங்கு உட்பட சில கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதெனினும் அவற்றின் பலன்களை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதற்கிடையில் ராஜீவ் காந்தி வழக்கில் சிறைத்தண்டனை நிறைவு செய்த நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை நீக்குவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை ஏற்குமாறு கேட்டுக்கொண்டு, இந்திய குடியரசுத் தலைவர், ராம்நாத் கோவிந்திற்கு நீங்கள் எழுதியுள்ள நீண்ட நெடிய கடிதம் குறித்து எனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்யவே இந்த திறந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன்.
இந்த வழக்கின் போக்கினை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் ஒருவர் என்ற வகையில், இந்த எழுவர் வாழ்க்கையினை அடுத்தடுத்த தமிழக அரசாங்கங்களால் பந்தாடுவதையும், உச்சநீதிமன்ற உத்தரவுகள் பிறப்பித்த போதிலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் சூழ்ச்சிமிகுந்த மோசமான விளையாட்டையும் கண்டு மிகுந்த அதிர்சியடைந்துள்ளேன். கெடுவாய்ப்பாக, இந்த அருவருப்பான அரசியல் விளையாட்டில் தற்போது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி, உங்கள் கையால் வழக்கம்போல் பகடையை உருட்டியுள்ளீர்கள்.
உங்கள் கடிதத்தை படித்தவர்களுக்கு நீங்கள் நல்ல நோக்கத்துடன் இச்செயலினை செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கக்கூடும், ஆனால் அது இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் நோக்கத்தை மீறுவதோடு, எழுவர் விடுதலையை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து, மீண்டும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர வாய்ப்பில்லை.
ஒரு மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் படி செயல்பட வேண்டும். ஆளுநர் தனது பொறுப்பினை இந்திய குடியரசுத் தலைவரிடம் தட்டிக்கழிக்கும் தற்போதைய போக்கு இந்தியாவின் மத்திய-மாநில உறவுகளின் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்று. கடந்தகால ஆட்சியாளர்களின் பலவீனமான நிலைப்பாட்டின் காரணமாகவே, ஆளுநர் தனது அரசியல் செல்வாக்கின் மூலம் அவ்வாறு தன்னிச்சையாக நடந்துகொண்டார்.
சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி, நீங்கள் எழுதிய கடிதம் மூலம், தமிழக அரசு இந்திய குடியரசுத் தலைவருக்கு எழுத்து மூலம் மாநிலத்தின் அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டது என்றே பொருள் கொள்ளவேண்டியுள்ளது. அதற்கு முழுக்க முழுக்க நீங்களே பொறுப்பு.
“நீங்கள் செய்ய வேண்டியது, இந்திய அரசியலமைப்பின் 161வது பிரிவின் கீழ் ஒரு மாநிலத்தின் அதிகாரங்களை தடுத்து வைப்பது அல்லது தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைத்தல் விதிகள், 1982, விதி எண் 40ன் கீழ் காலவரையற்ற விடுப்பு வழங்குவது மட்டுமே. இந்த அதிகாரம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. நளினியின் விடயத்தில் 2000 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்று நீங்கள் ஒரு குழந்தையாக இருக்கும் போது கற்றுக்கொண்டிருக்க கூடும்.”
கூட்டாட்சி தத்துவத்தினை நீங்கள் ஒரு மீளமுடியாத அரசியல் புதைகுழியில் தள்ளியுள்ளீர்கள். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து மூச்சுக்காற்று உற்பத்தி செய்யும் விடயத்தில், ஒதுக்கீடு பற்றி உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, தமிழக அரசு எதிர்கொண்ட சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தீர்களா?
உற்பத்தி செய்யப்படும் மூச்சுக்காற்று மத்திய அரசின் தேவைகளுக்குதான் முன்னுரிமை என்றும், தமிழக அரசின் தேவை இரண்டாம் பட்சமே என்ற மத்திய அரசின் உத்தரவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானது உங்களுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி. நீதிமன்றத்தின் உத்தரவு மாநில உறவுகளின் உரிமையை நிலைநாட்டுவதாக இருந்தபோதிலும், இந்த தீர்ப்பினை ஏற்றுக்கொண்ட உங்களது திமுக அரசின் பங்கு தமிழ் மக்களின் நலன்களையும், மாநிலத்தின் உரிமைகளையும் சமரசம் செய்துக்கொண்டதற்கு ஒப்பானது.
புகழ்பெற்ற அரசியல்வாதியான உங்கள் தந்தை கருணாநிதி தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்க காலத்தில் தமிழ், தமிழர் உரிமை பற்றாளராகவும் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் நாயகராகவும் திகழ்ந்தார் என்பதை என்னைவிட நீங்கள் நன்றாக அறிவீர்கள். சிரோமணி அகாலிதளத்தின் ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானத்தை அவர் பாராட்டியதாக வரலாறு பதிவுசெய்துள்ளது. ஏனெனில் அந்த தீர்மானம் மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்கும் உண்மையான கூட்டாட்சி முறையை மீண்டும் வலியுறுத்தியதே அதற்கு காரணம்.
ஆனால் அதே கருணாநிதி பிற்காலத்தில், அதாவது 2014 ஆம் ஆண்டில், அப்போதைய முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா இதே ஏழு தமிழர்களை விடுவிப்பதாக அறிவித்தபோது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 435ன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது உங்கள் தந்தை அந்த யோசனையை எதிர்த்தார், மத்திய அரசின் தலையீடு வேண்டும் என்றார்! எனவே, நீங்கள் அவர் கடைபிடித்த அதே சந்தர்ப்பவாத பாதையை பின்பற்றுவதில் எனக்கு எந்தவித ஆச்சரியமில்லை!
தற்போது உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது, இந்திய அரசியலமைப்பின் 161வது பிரிவின் கீழ் ஒரு மாநிலத்தின் அதிகாரங்களை தடுத்து வைப்பது அல்லது தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைத்தல் விதிகள், 1982, விதி எண் 40ன் கீழ் காலவரையற்ற விடுப்பு வழங்குவது மட்டுமே. இந்த அதிகாரம் ஏற்கனவே மாநில அரசுகளால் செயற்படுத்தப்பட்டுள்ளது. நளினியின் விடயத்தில் 2000 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்று நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே கற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
“ராஜீவ் காந்தி வழக்கில் சிறைத்தண்டனை நிறைவு செய்த நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் அவர்களை தொடர்ந்து சிறையில் அடைக்க எந்த காரணமும் இல்லை.”
“ஏழ்வர் தண்டனையை நீக்குவதற்கான வேண்டுகோளை தீர்மானிக்கும் திறன் மிக்க அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் என்று ஆளுநர் முடிவு செய்துள்ளதாகவும், மேலும், மாநில அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும்.” – உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுளீர்கள்.
இது ஏழு ஆண்டுகால தாமதமாகும். முதலாவதாக, அரசியலமைப்பின் 161வது பிரிவின் கீழ் முடிவெடுப்பதில் குறைந்தபட்சம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு அமைதியாக இருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, இந்திய யூனியன், இந்திய உச்சநீதிமன்றத்திற்கு அளித்த பதிலில், ஆளுநர் மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக கூறியது. மரு ராம் vs. இந்திய யூனியன் (1981) 1 எஸ்.சி.சி 107, பத்தி 59இல் மற்றும் ஷம்ஷர் சிங் & ஏஎண்ஆர் vs. பஞ்சாப் மாநிலம் (1974) 2 எஸ்.சி.சி 831 தீர்ப்புகளை கடந்துசெல்வத்துப்போல். ஏழு தமிழர்களின் வாழ்க்கை என்பது எலியும் பூனையுமான மத்திய மாநில அரசுகளின் அரசியல் விளையாட்டா? என்ற கேள்வியை உங்களிடம் நான் எழுப்ப விரும்புகிறேன்.
ஆனால் ராஜீவ் காந்தி வழக்கில் சிறைத்தண்டனை நிறைவு செய்த நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் அவர்களை தொடர்ந்து சிறையில் அடைக்க எந்த காரணமும் இல்லை. எதிர்வரும் வாரத்தில், இந்திய உச்சநீதிமன்றம் இந்த விடயத்தை எடுத்துக் கொள்ளும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பதில் விசாரணைக்கு வரும் என்பதை உங்களுக்கு சுட்டிகாட்டுகிறேன்.
இந்த ஏழு தமிழர்களும் ஏற்கனவே கடந்த முப்பது வருடங்களாக சொல்லிலடங்கா துயரங்களையும் வேதனையையும் அனுபவித்து தனது வாழ்க்கையையே விலையாக கொடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை கருத்தில் கொள்வதில் ஏற்கனவே மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலங்களிலும் தற்போதைய சூழ்நிலைகளில், சிறைச்சாலைகளில் கைதிகள் உட்பட ஆட்கள் குறைக்கும் தேவையையும் நீதிமன்றங்கள் அங்கீகரிக்கின்றன.
பேரறிவாளன் நீண்ட காலமாக சிறுநீர் தொற்று மற்றும் உயர் குருதி அழுத்தத்திற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டுவருகிறார். அவரின் நோய்வாய்ப்பட்ட மற்றும் வயதான பெற்றோர்களை இதை எழுதும் நான், பல சந்தர்ப்பங்களில் சந்தித்து குடும்பத்தினருடன் பரிவுணர்வை வெளிப்படுத்தியுள்ளேன். அவர் முற்றிலும் குற்றமற்றவர் என்றே நான் கருதுகிறேன். தங்கள் மகனை விடுதலை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தங்கள் வாழ்நாள் முழுவதையும் கழித்துவருகிறார்கள். அவருக்கு தற்காலிக விடுப்பு வழங்குவது, தீர்வாகாது. சட்ட விதிகளை பின்பற்றி, இந்த தமிழர்கள் ஏழு பேரும் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.
“குறிப்பிடத்தக்க வகையில், ஏழு தமிழர்களை விடுவிப்பது காலத்தின் தேவை என்பதை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள், “இது தமிழக மக்களின் விருப்பமும் கூட” என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். அதுதான் உண்மை கூட!”
இந்த முடிவில் நீங்கள் மற்ற அரசியல் கட்சிகளையும் சேர்த்துக்கொண்ட விடையத்தினால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், “தமிழ்நாட்டின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எழுவர் தண்டனையின் எஞ்சிய காலத்தை உடனடியாக நீக்கவும் கோருகின்றன. முப்பது ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.”
குறிப்பிடத்தக்க வகையில், ஏழு தமிழர்களை விடுவிப்பது காலத்தின் தேவை என்பதை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள், “இது தமிழக மக்களின் விருப்பமும் கூட”.
ஆளுநர் மாளிகையின் சுற்றி வளைக்கப்பட்ட மதில்சுவர்களுக்குள் அமரந்திருப்பவர் மத்திய அரசின் தயவில் ஒரு அரசியல் நியமன பொறுப்பினை வகித்து வருகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறுதியாக இன்னொன்றையும் உங்களுக்கு நினைவுபடுத்தி நிறைவுசெய்கிறேன்!
மு.க. ஸ்டாலின் அவர்களே, தமிழக மக்களின் உணர்வுகளை மக்களால் தேர்வுசெய்யப்பட்ட தமிழக முதல்வர்தான் புரிந்து முடிவெடுக்க வேண்டுமே தவிர, டெல்லியிலுள்ள குடியரசு தலைவர் மாளிகையில் வசதியாக அமர்ந்திருக்கும் ஒரு நியமன செயற்பாட்டாளர் அல்ல!
சகோதரத்துவமாக,
பேரா. ஜக்மோகன் சிங
ஆசிரியர், தீ வேர்ல்டு சிக் நியூஸ்
பேராசிரியர் ஜக்மோகன் சிங்
சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர், மரண தண்டனையை ஒழிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார், பேராசிரியர் திரு. ஜக்மோகன் சிங், தீ வேர்ல்டு சிக் நியூஸின் ஆசிரியராக உள்ளார். மேலும் வெளிப்படையாக கடிதங்கள் எழுதுவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து தொடந்து எழுதி, பேசி வருவதோடு, தமிழ்த்தேசிய கொள்கையை முழு மனதுடன் ஏற்றுள்ளார். மேலும் ராஜீவ் காந்தி வழக்கில் ஏழுத்தமிழர்கள் விடுவிப்பதற்கும் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கும் தொடர்ந்து குரல் எழுப்பியும் வருகிறார்.
THANK YOU: WSN gratefully acknowledges the translation of WSN editor Jagmohan Singh’s Open Letter to TN Chief Minister Stalin into Tamil from the original English by a keen WSN Tamil reader.